புதுக்கோட்டையில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை,பேச்சுப்போட்டி – நாளை 14 ந்தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு 2 மாணவர்கள் அனுப்பி வைப்பு

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாள் விழா இனி கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் 30-10-2021இல் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க அரசால் ஆணையிடப்பட்டது. அரசாணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6- ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.

போட்டியினை  பள்ளியின் தலைமையாசிரியர் ரா.தமிழரசி தொடங்கி வைத்து போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் வரவேற்று பேசினார். முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி வாழ்த்தி பேசினார். மாணவர்களின் படைப்பாற்றலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மா.சாந்தி, சி.மோகனசுந்தரம், சி.குறிஞ்சி,  இரா.மீனா,  க.உஷாநந்தினி, தயாநிதி ஆகியோர் மதிப்பீடு செய்து நடுவர்களாக பணியாற்றினர்.

புதுக்கோட்டை வருவாய்  மாவட்டத்தில் உள்ள 75 பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.  பேச்சுப்போட்டியில் லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம்  வகுப்பு படிக்கும் ந.சஞ்சனா முதலிடத்திலும், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்(பதின்ம) மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ச.சத்தியருபா இரண்டாம் இடத்திலும், செவ்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் தி.தீஷா மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றனர். கட்டுரைப்போட்டியில் கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9- ஆம் வகுப்பு படிக்கும் அ.சுபகார்த்திகா முதலிடத்திலும், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக்( பதின்ம) மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும்  மு.நிவேதா இரண்டாம் இடத்திலும், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் கு.அட்சயா மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ 10 ஆயிரமும்,  இரண்டாம் பரிசாக ரூ7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ 5 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட உள்ளது.போட்டியின் முடிவில் தமிழ் வளர்ச்சித்துறையின் கி.சுப்புராமன் நன்றி கூறினார். இரண்டு போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்  நாளை14ந்தேதி( வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணியளவில் சென்னை, கெங்குரெட்டித்தெரு எழும்பூர்  மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரக  தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு தலைமையிலான  குழுவினர் செய்திருந்தனர்.