முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் நோய் கண்டறியும் மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எச்.சலீம் வழிகாட்டுதலின் படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் ஊராட்சி, காவேரி நகர் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு காவேரி நகர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி வேலுச்சாமி தலைமை தாங்கினார், துணைதலைவர் முருகேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர், தற்போது நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, அதிக உடல் வெப்பம், தொண்டைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அனுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் முகமது முஸ்தப்பா அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் யோகேஸ்வரி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர், முடிவில் திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.