புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி பள்ளிகளில் நெகிழி இல்லா விழிப்புணர்வு

புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட  அரங்கில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை  பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று 07-09-23 நடைபெற்றது. முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு முகாமிற்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது;

எல்லாப்பள்ளிகளிலும் சுற்றுச்சூழல்/பசுமைப்படை மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டுவருகிற நிலையில் அதனை மேலும்  மெருகேற்றும் பொருட்டு இப்பயிற்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு  படிப்புடன் அவர்களது அனைத்து நல்திறன்களையும் வெளிக்கொண்டுவரும்பொருட்டு மன்றச்செயல்பாடுகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுற்றுச்சூழல்/ பசுமைப்படை மன்றம் முக்கியமானதாகும். மாணவர்களுக்கு பள்ளிகளில் சுற்றுச்சூழலை  பாதுகாக்க வழிகாட்டுவதோடு  சுற்றுப்புறங்களில் மரம் வளர்ப்பதால் மழை பெறுவது, மண்அரிப்பினை தடுப்பது, மண்சரிவினை தடுப்பது உள்ளிட்ட மரம் வளர்ப்பதால் ஏற்படும்  பல்வேறு நன்மைகள்  குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டிடவேண்டும்.  மேலும் மழைநீர் சேகரித்தல், பாதுகாத்தல், பயன்படுத்துதல் பற்றிய  விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும். இதோடு  ஒவ்வொரு மாணவரிடமும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை  அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்றி புதுக்கோட்டை மாவட்டத்தினை தமிழகத்திலேயே சிறந்த மாவட்டமாக மாற்றிட பாடுபடுமாறு  உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

முகாமில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ஆ.ரமேஷ், தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர் த.அறவாழி,  முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலை வி.முருகையன், இடைநிலை த.ராஜூ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் ஜெ.சுதந்திரன்,  உதவித்திட்ட அலுவலர் திரு தங்கமணி  (தொடக்கக்கல்வி – பொ) , மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கே.செல்வக்குமார், தோப்புக் கொல்லை வனச்சரக அலுவலர் சோ.கார்த்திக்ராஜா,  3 வது பிளானட் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ச.சாண்டில்யன், இயற்கை விவசாயி 27ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்  எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  

முகாமில் பள்ளிகளில் நெகிழி இல்லா விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வழங்கப்பட்ட மஞ்சள் பையினை  முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கினார். நிகழ்ச்சியினை யொட்டி முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக்கல்வி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,  புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர்   குரு.மாரிமுத்து, அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.அன்பழகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இளைஞர் மற்றும் சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ப.விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில்  தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரெங்கராஜூ நன்றி கூறினார்.