புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கோடிக்கணக்கில் செலவழித்து சீரமைக்கப்பட்ட”மீன் மார்கெட்” குளத்தின் சூற்றுச்சூழலைப் பார்க்கும்போது கண்ணீர்தான் வருகிறது என்று தனது ஆதங்கத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார் பேராசிரியர் விஸ்வநாதன்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் விஸ்வநாதன் இந்த சமூக மாற்றத்திற்காகவும் சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் இவரும் ஒருவர். புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் குளம் ஒட்டுமொத்த புதுக்கோட்டை சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு அங்கமாக இருப்பதை கனத்த இதயத்துடன் சுட்டிக்காட்டி இன்றைக்கு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒருமுறைப் போய் இந்த குளத்தை பாருங்கள். அந்தப் பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மிக அழகாக பேவர்பிளாக் கல் போட்டு சீரமைத்திருந்திருந்திருக்கிறார்கள். இப்போது அவ்வளவும் வீணாக போய்விட்டது யாரும் நடை பயிற்சி மேற்கொள்ளாத அளவிற்கு, சீரழிந்துபோயிருக்கிறது. புதுக்கோட்டை மக்களுக்கு அழகுணர்ச்சியே இல்லையென்பதற்கு இந்தக்குளம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தக் குளம் வீணாய் போனதற்கு அருகில் இருக்கக்கூடிய நகராட்சி மீன் மார்க்கெட்டும் அங்கு மீன் வெட்டும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுமே முக்கிய காரணம். மீன் மார்க்கெட்டுக்குள் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் பணி காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்போது அதற்கு குளத்தின் மேல்கரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனுமதி கொடுத்தவர்களுக்கு மீன் கழிவுகள் குளத்திற்குள் போகும் என்பது தெரியாமல் போனது ஆச்சரியம்தான். தினந்தோறும் குறைந்தபட்சம் 500 கிலோ மீனின் கழிவுகள் கணிசமான அளவிற்கு குளத்திற்குள் போய்க்கொண்டிருக்கிறது. அது எந்த அளவிற்கு அந்தக்குளத்து நீரை பாழ்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் துறைக்குத்தான் வெளிச்சம்.
குளத்தைச் சுற்றி வழிபாட்டுத்தளங்கள் உள்ளன. அதற்குப் போகிறவர்கள் யார் கண்ணிலும் இந்தக்குளத்தின் சீரழிவு தென்படவில்லை.

மேலும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அவர்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
குளத்தை குப்பைக் கொட்டும் இடம் என்று நினைக்கும் மனநிலையில் புதுகை மக்கள் இருக்கிறார்கள். இதில் புதுக்கோட்டை நகராட்சியோ 100 ஆண்டுகளை கடந்த ஒன்று எனவும் அன்மையில் சட்டசபையில் மானிய கோரிக்கையில் புதுக்கோட்டை”மாநகராட்சி” ஆகவில்லையென்று வருத்தம் வேறு.
மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதை கொஞ்சம் கனிவோடு கவனிக்க வேண்டுவதாகவும். நகராட்சி ஆணையரோ அல்லது நகர்நல அலுவலரோ பத்திரிக்கை, ஊடக நண்பர்களும் ஒருமுறையாவது சுற்றி பார்க்க வேண்டும் எனக்கூறும் அவர். தமிழகத்தை முதலமைச்சர் பதவியில் அலங்கரித்து கொண்டிருந்த காமராஜரிடம் நகர சீரமைப்பிற்காக வெளிநாடுகளில் உள்ளதை போய்ப் பார்த்து வர வேண்டும் என்று அதிகாரிகள் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்னாராம் ‘முதலில் புதுக்கோட்டையை போய்ப் பார்த்து வாருங்கள்’ என்று. இப்போது காமராஜர் இருந்தால் என்ன சொல்வாரோ என்று ஆதங்கப்பட்டு கொள்கின்றார் பேராசிரியர் விஸ்வநாதன்.

புதுகை வரலாற்றின் எதிர்பார்ப்பு
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நகரின் மையப் பகுதியில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இக்குளத்தை பராமரிக்கவும் எதிர்வரும் காலத்தில் குப்பை கூளங்கள் குளத்திற்கு செல்லாதவாறு குளத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா அமைத்து குப்பையை கொட்டும் நபர்கள் மீது அதிகப்படியான தொகையை நகர தூய்மைப் பணிக்காக அபராதமாக வசூலித்து தூய்மையான நகராட்சி புதுக்கோட்டை நகராட்சி என்பதை பணியிலிருக்கும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது புதுகை வரலாற்றின் எதிர்பார்ப்பு.
