புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை – காவல் துறையிடமே கைவரிசையா பொதுமக்கள் பீதி

புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடைய கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஆய்வாளரின் வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமிக்காக வைத்திருந்த சுமார் 2 ஆயிரம் ரூபாய் சில்லறை காசுகளை கொள்ளையர்கள் திருடாமல் விட்டுச் சென்ற நிகழ்வு போலீசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக அடுத்தடுத்து ஏழு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ள நிலையில் இது குறித்து போலீசார்  உரிய நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 புதுக்கோட்டை அழகர் நகரில் வசிப்பவர் கோபிநாத், இவர் புதுக்கோட்டை ஆயுதப் படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபிநாத் தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே  இன்று காலை அவரது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அருகே இருப்பவர்கள் கணேஷ் நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து கோவையில் உள்ள ஆய்வாளர் கோபிநாத்திற்கு தகவல் கொடுத்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடையவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளை சம்பவம் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர், குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாத காலத்தில் சின்னப்பா நகர்,அழகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வது இது 7 வது சம்பவம் என்றும் இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை துரிதப்படுத்துவதோடு அங்குள்ள வீதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தின் போது ஆய்வாளர் கோபிநாத் தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமிக்காக சில்லரை காசுகளை சேகரித்து வைத்துள்ளார், அதில் 2000 ரூபாய்க்கு மேலான சில்லறை காசுகள் இருந்த நிலையில் கொள்ளையர்கள் அதனை எடுக்காமல் விட்டுச் சென்ற நிகழ்வு போலீசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − = 44