புதுக்கோட்டையில் எல்ஐசி அலுவலக ஊழியர் கண்ணம்மாளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் என்.கண்ணம்மாள் என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி.

எல்ஐசி அலுவலகத்தில் ஊழியராகவும், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய என்.கண்ணம்மாள் இன்று பணிநிறைவு செய்கிறார். அவருக்கான பணிநிறைவு பாராட்டுவிழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உ.வாசுகி பேசியது,

எல்ஐசியை பாதுகாப்பதில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் பிரதான பங்காற்றி வருகிறது. இச்சங்கம் தனது ஊழியர் நலனுக்கான சங்ம் மட்டுமல்ல. சமூக சிந்தனையோடு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கஜா புயல் பாதிப்பின் போதும், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளது.

மேலும், சிந்தனையாளர்களை உருவாக்கி முற்போக்கு முகாமிற்கு பல ஊழியர்களை தந்துகொண்டிருக்கிறது. பணிநிறைவு செய்ய இருக்கின்ற என்.கண்ணமாளின் கடந்தகாலப் பணிகள் பாராட்டத்தக்கது. அறிவொளி இயக்கத்தில் பாமர மக்களுக்கு எழுத்தறிவைப் போதிப்பதாகட்டும், கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக குவாரியை அமைத்துக்கொடுத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பாடுபட்டதாகட்டும், உழைக்கும் பெண்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதாகட்டும் அனைத்திலும் கண்ணம்மாளின் பங்கு முக்கியமானது.

கமிட்டி கூட்டங்களில் யார் மனமும் புண்படாமல் அதே நேரத்தில் தனது கருத்தை ஆணித்தரமாக பதியவைக்கும் உத்தியை கண்ணம்மாளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பணிநிறைவு பெற்றாலும் கண்ணம்மாளின் செயல்பாடு முடங்கிவிடாது. மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் அவரின் கடமை தொடரும் என்றார்.

விழாவிற்கு சங்கத்தின் தஞ்சை கோட்டத் தலைவர் சே.செல்வராஜ் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, தென்மண்டல இன்சூரன்ஸ்ட் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, துணைத் தலைவர் க.சுவாமிநாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஜெ.விஜயா, இரா.புன்னியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக கோட்டப் பொதுச் செயலாளர் வ.சேதுராமன் வரவேற்க,  என்.கண்ணம்மாள் ஏற்புரை வழங்கினார். ஆர்.சீதளா நன்றி கூறினார். இந்நிகழ்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 84 = 85