புதுக்கோட்டையில் புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கி (ஏப்.8) நாளை நிறைவடைகிறது.
புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள விஜய் பேலஸில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. புதுகை வரலாறு நாளிதழ் சமூக சேவையுடன் கல்வி சேவையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இக்கண்காட்சியில் தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி. பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, பாலிடெக்னிக், கணினி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுவதோடு, அவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கங்களும் அளிக்கவுள்ளனர். இந்த மாபெரும் கல்வி கண்காட்சி இன்று ஏப்ரல் 8 தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதில் சென்னை, பெங்களூரு, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 38 கல்விநிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இன்றைய தொடக்க விழா நிகழ்வில் புதுகை வரலாறு நாளிதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் சு.சிவசகதிவேல் வரவேற்புரையாற்ற உள்ளார். எஸ்ஆர் புளு மெட்டல்ஸ் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் கல்வி கண்காட்சியை திறந்து வைக்கிறார். பேக்கரி மஹராஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அருண் சின்னப்பா, விஜய் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குனர் முருகானந்தம், முத்து மீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பெரியசாமி, கேஎம்எஸ் ஹக்கீம் நிர்வாக இயக்குனர் சையது இப்ராஹிம், நெல்லுமண்டித்தெரு ஸ்ரீ புவனேஸ்வரி ஜுவல்லரி உரிமையாளர் வெங்கடேஷ், புதுகை வரலாறு நாளிதழின் சென்னை பதிப்பு தலைமை செய்தியாளர் காதர் உசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். புதுகை வரலாறு ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றுகிறார். நாளை நடைபெறும் விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, சிங்கப்பூர் அதிபரிடம் சமூக சேவை விருது பெற்ற தமிழர் அடித்தள தலைவர் சிங்கப்பூர் மூர்த்தி, மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மாணவர்கள், பெற்றோர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு லேப்டாப் பரிசு
கண்காட்சியில் பங்கேற்கும் +2 மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குலுக்கல் முறையில் மூன்று லேப்டாப்கள் பரிசு வழங்கப்பட இருக்கின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வை எழுதி இருக்கக்கூடிய 21,000 மாணவர்களும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
