புதுகையில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் காய்கறி மார்க்கெட்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டையில் இதயப்பகுதியான கீழ ராஜவீதியில் பழுதாகி நிற்கும் கட்டிடங்களுக்கு இடையே ஆபத்தான நிலையில் மாலையில் செயல்படும் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்கும் முன் இந்த மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

புதுக்கோட்டை நகரில் நாள்தோறும் மக்கள் பரபரப்பாக இயங்கி வரும் கீழராஜவீதியில் புதுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் செடிகள் வளர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே தனியாருக்குச் சொந்தமான பழைய கட்டிடமும் பாழடைந்து காணப்படுகிறது.

இந்த ஆபத்தான இருகட்டிடங்களுக்கு இடையில் தான் மாலை முதல் இரவு வரை செயல்படும் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. சுமார் 50 கடைகள் உள்ள நிலையில் கீழராஜவீதி சுற்றுவட்டார மக்கள் இங்கு தான் காய்கறி வாங்க வருகின்றனர். அரசு அலுவலர்கள் மாலையில் இவ்வழியாகச் செல்லும் போது இந்த மார்க்கெட்டில் காய்கறி வாங்கிச் செல்கின்றனர். நாள்தோறும் இந்த காய்கறி மார்க்கெட்டால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் மக்கள் நெருக்கம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது விபத்துக்களில் சிறுவர்கள், பெண்கள்,  பெரியவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வழியே செல்லும் 108 அவசரகால ஆம்புலன்ஸ்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சரியான நேரத்திற்கு செல்ல முடியாத அவலமும் நடக்கிறது.

சர்ச்சைக்குரிய இந்த பழைய கட்டிடங்கள் மழைக்காலத்தில் இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. இங்கு செயல்படும் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

ஆகவே, புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த காய்கறி மார்க்கெட்டை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால், பழுதுபட்டு நிற்கும் நகர கூட்டுறவு வங்கியை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்க எடுக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, தற்போதே நகராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நகராட்சி ஆணையர் விளக்கம்:

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜனை புதுகை வரலாறு சார்பில் தொடர்பு கொண்டு மக்கள் அதிகம் கூட கூடிய இடத்தில் அவர்கள் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இரு புறங்களிலும் உள்ள கட்டிடங்களின் அபாய நிலை குறித்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது;

காய்கறி மார்க்கெட் நடைபெறக்கூடிய இடத்தில் தனியாருக்குச் சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த இடியும் தருவாயில் உள்ள கட்டிடம் இடித்து அப்புறப்படுத்த கட்டிடத்தின் உரிமையாளரே விண்ணப்பம் செய்து அதற்கான அனுமதியையும் பெற்று விட்டார். ஆனால், அவர்கள் இதுவரை இடிக்க முன்வரவில்லை. அருகில் இயங்கி வரும் நகர வங்கி கட்டிடத்தின் தன்மை குறித்து தங்கள் மூலம் தான் அறிய நேர்ந்தது. அதுகுறித்து உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு எந்த அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி கடை நடத்தி வருபவர்களில் ஒருவர் மட்டுமே காய்கறி கடையை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருக்கு உரிய அறிவுரை வழங்கி மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 12 = 16