புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் பேசினார்.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட. முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் பேசியதாவது:தமிழ்நாட்டில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டு முதியோர்களுக்கான எழுத்தறிவையும் எண்ணறிவையும் வழங்கிட கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-2022 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது..இத்திட்டத்தின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 கற்றல் மையங்களில் 7949 கற்போர் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் வழங்கி மாநில எழுத்தறிவு விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்திடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027 என்ற புதிய திட்டம் 5 ஆண்டுகள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 13,680 கற்போர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 10,851 பேர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர்.அதே போல் 690 மையங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 596 மையங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.மீதமுள்ள மையம் தொடங்கும் பணியை விரைவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் முடித்திட வேண்டும்.மேலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ,வட்டார கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் , பயிற்றுநர்கள் ,தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியோடு செயல்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கநிலை) சுவாமி முத்தழகன் ,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கநிலை) சண்முகம்,புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ் ஆகியோர் திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்கள்.
கூட்டத்தில் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,வட்டார வளமைய பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.