பிறந்த நாளன்று மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணித்த மோடி: புது ரெயில் நிலையம் திறப்பு

இந்திய தலைநகர் டெல்லியில், புது டெல்லி மெட்ரோ ரெயில் நிலையம் தொடங்கி துவாரகா செக்டர் 21 பகுதியின் ரெயில் நிலையம் வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது.

“டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன்” என அழைக்கப்படும் இந்த வழித்தடத்தின் தூரம், 22.7 கிலோமீட்டர் ஆகும். இந்த மெட்ரோ வழித்தடத்தில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்து மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இன்று “யஷோபூமி” என பெயரிடப்பட்ட உலகிலேயே மிக பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த மையத்திற்கு அருகில் செக்டர் 25 பகுதிக்கான ரெயில் நிலையம் அமைத்து செக்டர் 21 ரெயில் சேவையை 2.2 கிலோமீட்டர் நீட்டிக்கும் பணிகள் நடந்து வந்தது. அப்பணிகள் நிறைவடைந்து ரெயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருந்தது.

இன்று காலை பிரதமர் மோடி இந்த நீட்டிக்கப்பட்ட வழித்தட சேவையை பயணிகள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆரஞ்சு லைன் வழித்தடம் எனப்படும் இந்த பயண தூரம் 24.9 எனும் அளவில் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தடத்தில் இன்று பிற்பகல் 03:00 மணி முதல் சேவைகள் தொடங்கும். “யஷோபூமி துவாரகா செக்டர் 25 ரெயில் நிலையம்” என அழைக்கப்படும் இந்த ரெயில் நிலையத்தில் தொடங்கி 3 சுரங்க வழி நடைபாதகள் செல்கின்றன. அதில் 735 மீட்டர் கொண்ட சுரங்க நடைபாதை நேராக யஷோபூமி மையத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரதமர் மோடி இந்த புது ரெயில் நிலைய சேவையை தொடங்கி வைக்க டெல்லி தவுலா குவான் ரெயில் நிலையத்தில் மெட்ரோவில் ஏறி பயணம் செய்தார். அதில் பயணிகளுடன் அவர் உரையாடினார். அவர் உடன் பயணம் செய்யப்போவதை எதிர்பாராத பயணிகள் ஆச்சரியத்தில் மிகவும் மகிழ்ந்தனர். தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.