பிரம்மபுரம் திடக்கழிவு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று, கொச்சி மாநகராட்சி ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி மாநகராட்சியில் பிரம்மபுரம் பகுதியில் திடக்கழிவு மையம் உள்ளது. இந்த மையத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பையில் கடந்த 6-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொச்சி மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தும் 12 நாட்களாக தீயை அணைக்க முடியவில்லை. அதன் பின்னர் அணைக்கப்பட்டது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைய தீர்ப்பாய நீதிபதி கோயல், கொச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் மெத்தன போக்கால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு கொச்சி மாநகராட்சி பொறுப்பேற்று ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அந்த தொகையை மாநில தலைமை செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும். மேலும் கொச்சி மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.