தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவரான நல்லெண்ணெய் சித்ரா இன்று நள்ளிரவு 2 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த 80களில் பிரபல நடிகையான சித்ரா(56) இயக்குனர் கே.பாலச்சந்திரனின் அவள் அப்படிதான் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவராவார்.
நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் இவர் நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்டு வந்தார். விஜயராகவன் என்பவரை திருமணம் செய்த இவருக்கு மகாலட்சுமி என்ற மகள் உள்ளார்.
மேலும் இவர் தமிழில் ராஜ பார்வை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர் காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறப்பான நடிப்பால் பேசப்பட்டவராவார்.
இந்நிலையில் நல்லெண்ணெய் சித்ராவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.