பிரபல தாதா அத்திக் அகமது சுட்டுக் கொலை: உத்தரப்பிரதேசம்  முழுவதும் 144 தடை உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல ரவுடியான அத்திக் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அத்திக் அகமது, அவரது சகோதரர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அத்திக் அகமது, அவரது சகோதரர் ஆகிய இருவரையும் நேற்று மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்து சென்றனர். அப்போது இருவரும் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது திடிரென மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். காவல்துறையின் பாதுகாப்புக்கு இடையே இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரட்டை கொலை சம்பவத்தை அடுத்து பதற்றம் நிலவுவதாக உத்தரப்பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பிரயாக்ராஜ் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். துப்பாக்கி சூட்டில் ஒரு பத்திரிகையாளரும், ஒரு காவலரும் காயம் அடைந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து அவசர கூட்டத்தை கூட்டிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதேபோல 3 பேர் கொண்ட ஆணையம் மூலம் நீதி விசாரணை நடத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்திய அவர் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் குற்றச் செயல்கள் உச்சத்தை எட்டியுள்ளதாக விமர்சித்தார். பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்க இதுபோன்ற சூழல்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். கடந்த 2005ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூபால் என்பவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்பி அத்திக் அகமது உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொலை வழக்கில் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடந்த பிப்.24ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது அவரது மகன் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக அத்திக் அகமது அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே தேடப்பட்டு வந்த அத்திக் முகமதுவின் மகன் கடந்த 13ம் தேதி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அத்திக் அகமது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். 5 முறை எம்எல்ஏவாகவும், ஒருமுறை எம்பி.யாக பதவி வகித்திருக்கும் அத்திக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 51 = 61