பிபிசி மீதான அந்நியச் செலாவணி மீறல் குற்றச்சாட்டு அமலாக்கத் துறை விசாரணை

பிபிசி செய்தி நிறுவனம் அந்நியச் செலாவணி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆய்வு செய்ய வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு பிபிசி இந்தியா நிறுவன அதிகாரிகளை அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டதாகவும், இதையடுத்து, பிபிசி அதிகாரி ஒருவர், அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகள் முன் இன்று ஆஜரானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் குறித்தும், இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் பிபிசி சமீபத்தில் ஆவணப்படம் தயாரித்தது. ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இரண்டு பகுதிகளாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்துக்கு பாஜக தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிபிசியின் சில பணப் பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தாதது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிபிசி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களால் காட்டப்பட்ட வருமானம், இந்தியாவில் அதன் செயல்பாடுகளின் அளவோடு ஒத்துப்போகவில்லை என்று வருமான வரித் துறை கூறியது.

பிபிசி விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் வருமான வரித் துறையின் இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கத் துறை இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 − = 18