பாழடைந்த பள்ளி கட்டிடம்; ஆரம்ப சுகாதார நிலையம்; மீமிசல் அருகே நாள்தோறும் அவதிப்படும் மாணவர்கள்; புதுகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மீமிசல் அருகிலுள்ள பொன்னமங்கலம் ஊராட்சி சிறுகடவாக்கோட்டை கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் ஆங்காங்கு சுவர்கள் விழுந்த நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இடத்தின் அருகில் அரசினர் துணை ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அந்தக் கட்டிடம் பாழடைந்து தற்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கு அந்த கட்டிடத்தை இடிக்க ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டிடத்தில் இருந்து பக்கத்து வீட்டிற்கு மின்சார துறையினரால் வயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மின்சார வயர்களை மின்சார வாரியத் துறையினர் அகற்றினால் தான் அந்த கட்டிடத்தை முழுமையாக இடிக்க முடியும்.

இதன் அருகில் தற்போது பள்ளி கட்டிடம் இயங்குகின்றது. இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குழந்தைகள் விளையாடும் போது அதன் அருகில் இடிந்து விழுந்த நிலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் மற்றும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிட கற்கள் கீழே விழுகிறது.

பாழடைந்த பள்ளிக்கும், இடிக்கப்பட்டு வரும் சுகாதார நிலையத்திற்கும் இடையில் தான் மாணவ, மாணவிகளின் கழிப்பறை உள்ளது. அந்த கழிப்பறைக்கு குழந்தைகள் செல்லக்கூடாது என்று அந்தப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை, ஆசிரியர்கள் கழிவறைக்கு பூட்டு போட்டு உள்ளே செல்லாதவாறு முள்வேலி அமைத்துள்ளனர். அதனால் பள்ளி குழந்தைகள் அருகாமையில் உள்ள கருவேல மரங்களை நோக்கித்தான் சிறுநீர் கழிக்கச்செல்ல முடிகின்றது.

சுவர்கள் இடிந்து விழுந்து பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன், துரிதமாக நடவடிக்கை எடுத்து அந்த பாழடைந்த அரசு பள்ளியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பாழடைந்த துணை சுகாதார நிலையத்தையும் அப்புறப்படுத்தி விட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

இப்பிரச்சினையில் புதுகை மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, சுகாதாரத்துறை கவனம் செலுத்தி புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கும், புதிய சுகாதார நிலையம் அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறுகடவாக்கோட்டை கிராமப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 11 =