பாழடைந்து வரும் பழையாறு மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தமிழக வாழ்வுரிமை கட்சி  கேள்வி?

பாழடைந்து வரும் பழையாறை சீரமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள குமரி மாவட்டம் பல லரலாறுகளை உள்ளக்கிய சிறிய மாவட்டம் ஆகும். விவசாயத்தை நம்பியே வாழும் குமரி மாவட்டத்தில் விவசாயத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அணை, குளம் , கால்வாய்கள் ஏராளம் உண்டு.   இவைகளில் பல இன்று கேட்பாரற்று கவனிப்பாரின்றி பரிதவிக்கிறது. இதனால் விவசாயமே அழியும் நிலையில் உள்ளது. 1992 – ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையால் இவைகளில் பல பாழ்பட்டு கிடக்கிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் உடைப்புகள் இன்றும் கூட பல பகுதிகளிலும்  செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முக்கிய ஆறு பழையாறு. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அசம்பு மலையில் தொடங்கி மணக்குடி காயலில் இந்த ஆறு கலக்கிறது. சுமார்

37 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த ஆற்றின் மூலம் சுமார் 15 ஆயிரம்  ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.  தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகா பாசனம் பழையாற்றை நம்பி தான் உள்ளது. வீரப்புலி,  பூதப்பாண்டி, வீரநாரயணமங்கலம் , கீழபுத்தேரி , ஒழுகினசேரி , சுசீந்திரம், தென்தாமரைகுளம் ஆகிய இடங்கள் வழியாக இந்த ஆறு ஓடுகிறது.  பழையாறு பாசன வசதிக்காக 6 1/2 கிலோ மீட்டர் நீளத்தில் சபரி அணையும், 3 1/2 கிலோ மீட்டர் நீளத்தில் குமரி அணையும் மற்றும் பல்வேறு சிறு, சிறு அணைகளும் கட்டப்பட்டு உள்ளது.

தற்போது அசுத்தமான ஆறாக ஓடுகிறது. தடுப்பு சுவர்கள், கூரைகள் உடைக்கப்பட்டும் , மண்திட்டைகள் நிறைந்தும் ,  செடி-கொடிகள், பாசிகள் படர்ந்தும் , வளர்ந்தும் கவனிப்பாரற்று கிடக்கிறது. எச்சில் இலைகளும், கால்நடை கழிவு, மாமிச கழிவுகளும் நிறைந்து தற்போது பழையாறே காணாமல் போகும் நிலையில் உள்ளது. மிக அகலமான ஆறு இன்று அகலம் குறைந்து குறுகி காணப்படுகிறது.

எனவே போர்கால அடிப்படையில் பழையாற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் சுத்தம் செய்தும் சரிபடுத்த வேண்டும். இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 69 = 71