பால் உற்பத்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கங்கள் நெய் வாங்க வற்புறுத்த கூடாது : விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

பால் உற்பத்தியாளர்களிடம் நெய் வாங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்த கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் அதன் நிறுவனர் செல்ல.இராசாமணி, பொதுச்செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தழிழக முதல்வர், விவசாயம் பால்வளம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டில் விவசாயிகளோடு ஒன்றிணைந்த தொழிலாக கறவை மாடுகள் வளர்ப்பது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த கொரோனா காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு தாங்கள் விவசாயத்தில் விளைவித்த விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தாங்கள் வளர்க்கும் கறவைமாடுகள் மூலம் வருகின்ற சிறிய வருவாயை வைத்து கறவை மாடுகளுக்கான தவிடு, தீவனம் வாங்கவும், விவசாயத்திற்க்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்து, ஆட்களுக்கு கூலி, மற்றும் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்தும் வருகிறார்கள். இவ்வாறு இருக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச்செல்லும் பாலில் இருந்து 1 லிட்டருக்கு 200மிலி வீதம்  மீண்டும் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொரு பால் உற்பத்தியாளரும் 200கி நெய் வாங்கிட வேண்டும் எனவும் வற்புறுத்துவதாகவும் தெரிகிறது. இவ்வாறு செய்வதால் விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களுக்கு கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

இதைத் தவிர்க்கும் பொருட்டு ஆவின்பால் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை பள்ளி மாணவர்களுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும், ரேஷன் கடைகளின் மூலமும், பாலின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் அதைவிடுத்து  பாலைத்  திரும்ப அனுப்புதல் மற்றும் நெய் வாங்கும் படி வற்புறுத்துதல் போன்ற செயல்பாடுகளால் விவசாயிகளை மென்மேலும் நசுக்கும் செயலாக உள்ளது.

பால்  உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் வீட்டிற்கு  பால், தயிர், வெண்ணை, நெய் இவற்றின் தேவைகளுக்கு போக மீதமுள்ள பாலையே கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனைக்கு கொண்டுவருகிறார்கள். இவ்வாறு இருக்க பால் உற்பத்தியாளர்களுக்கே நெய்யை 200 கிராம் 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது.

இவ்வாறு விவசாயிகளிடமே பால் சார்ந்த பொருட்களான வெண்ணெய், நெய் இவற்றை கட்டாயமாக விற்பனை செய்வதற்குப் பதிலாக வணிக நிறுவனங்களினுடைய தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி தனியாரிடம் இருந்து பெறப்படும் வெண்ணெய், நெய்க்கு பதிலாக அரசாங்கத்தினுடைய வெண்ணெய், நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் மளிகைக் கடைகள், ஷாப்பிங் மால்கள், ரேஷன் கடைகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுலாத் தளங்கள், தலைமைச் செயலகம், காவல் நிலையங்கள், உழவர் சந்தை, காய்கறிச்சந்தைகள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், மெட்ரோ இரயில் நிலையங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், விடுதிகள் மற்றும் வாய்ப்புகள் எங்கெங்கே இருக்கிறது என்று நிபுணர் குழு அமைத்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்திடவும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விவசாயிகளிடம் திரும்ப வாங்க நிர்ப்பந்தம் செய்வதற்கு தடை விதித்திடவும், மேலும் பாலின் கொள்முதல் விலையினை பசும்பாலுக்கு ரூ.3, எருமைப்பாலுக்கு ரூ.5ம் உடனடியாக விலையேற்றம் செய்திடவும் தகுந்த ஆவண செய்யுமாறு தமிழக முதல்வரையும், துறை சார்ந்த அமைச்சர்களையும் பால் உற்பத்தியாளர்களின் சார்பாகவும், அனைத்து விவசாயிகளின் சார்பாகவும், விவசாய  முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.