ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வயது 19 அதிரடியாக விளையாடி தங்கம் வென்றுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த இவர் போட்டியில் எஸ்எச் பிரிவில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து அவனி லெகாரா வரலாறு படைத்து உள்ளார்.
ஆண்களுக்கான எப்56 வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் 24 வயதாகும் யோகேஷ் 44.38 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான எப்46 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சுந்தர் சிங்.
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி வென்றார். இது அவருக்கு பாராஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது பதக்கம் ஆகும்.
இன்று அவர் வீசிய 64.35 மீட்டர் தூரமே அவரது அதிகபட்ச தூரமாகும்.
இப்போது அவருக்கு 40 வயதாகிறது. ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 23. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். நேற்று இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்று இருந்தனர்.