பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணியார் ரமாதேவி தொண்டைமான் காலமானார் தலைவர்கள் இரங்கல் இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறுகிறது

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமான் சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமான் மனைவி ராணியார் ரமாதேவி தொண்டைமான் (83) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுக்கோட்டை அரசு தோன்றிய வரலாறு கள்ளர் குலத்தில் தலைவராக திகழ்ந்த ஆவுடை இரகுநாத தொண்டைமான். விஜய நகர அரசு வாரிசான மூன்றாம் ஸ்ரீரங்காவிற்கு, படை தளகர்த்தராக விளங்கினார். அவர் அங்குள்ள மற்ற தளபதிகளை வென்று விஜய நர பேரரசால் ராய ராகூட்ட ராய வஜ்ஜிருடு ராய மன்னிட ராயா என்று பட்டம் சூட்டப்பெற்று அந்தப்பகுதியில் புதியக்கோட்டை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஆட்சி புரியத் துவங்கினார்.

இரகுநாத ராயா தொண்டைமான் 1686 – 1730

ஆவுடை தொண்டைமானின் மகன் இரகுநாத ராயா தொண்டைமான் 1661ல் தன்னுடைய தந்தையாரின் மறைவிக்குப்பிறகு மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இரகுநாத ராயா தொண்டைமான் மிகுந்த தெய்வ பக்தி உடையவராகவும், வேட்டையாடுவதிலும், வேல்க்கம்பு சுற்றுவதிலும் இணையற்ற வீரராகத் திகழ்ந்தார். சேது, இராமேஸ்வரம் செல்கின்ற யாத்ரீகர்களை துன்பறுத்திய கொள்ளைக்காரர்களை இவர் அடக்க வேண்டுமென்று தஞ்சை மன்னர் இவர் தலைமையில் பாதுகாப்பு படையொன்றை நிறுவினார். கொள்ளைக்காரர்களை வேட்டையாடி யாத்ரீகர்களின் பயத்தை போக்கியதால் தஞ்சை மன்னர் இவருக்கு இராம மடம் என்னும் வைர மாலையையும், பெரிய இராமபாணம் என்று கூறப்படும் வில் அம்பையும் பரிசாக அளித்தார். பின்னர் இவர் தன்னுடைய சகோதரி கதலி ஆயியை இராமநாதபுர மன்னன் கிழவன் சேதுபதிக்கு மணம் முடித்து 1686ல் தன்னுடைய ராஜாங்கத்தை விரிவுப்படுத்தினார். குளத்தூர் மற்றும் திருமயத்தை வென்று, கிழவன் சேதுபதியால் சின்ன இராமபாணம் வழங்கப்பெற்றார். இரகுநாத ராயா தொண்டைமானின் சகோதரர் நமணத் தொண்டைமான் 1960ல் குளத்தூர், விராலிமலை அம்மன் குறிச்சியை உள்ளடக்கிய தன் அரசை நிறுவினார். குளத்தூரில் சிவன் கோவில் ஒன்றும், திருமால் கோவில் ஒன்றும், மன்னர் நமணத் தொண்டைமானால் நிறுவப்பட்டது. குளத்தூர் அரசு புதுக்கோட்டை அரசுக்கு பக்க பலமாக விளங்கியது. அவர்களுக்குள் போட்டியில்லை, பொறாமையில்லை. புதுக்கோட்டை மன்னர் இரகுநாத ராய தொண்டைமான் 44 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து பல போர்களில் வெற்றி பெற்று தனது அரசை விரிவு படுத்தினார்.

இராஜகோபால தொண்டைமான் 1928 – 1948

புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையில் 9வது மன்னராக இராஜகோபால தொண்டைமான் 1928 – ல் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 6 ஆகும். இராஜகோபால தொண்டைமான் 1922 ஆம் ஆண்டு இராஜ்குமார் இராஜேந்திர தொண்டைமானுக்கும் ஜானகி ஆயி அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். தனது 22 ஆம் வயதில் ஆட்சி உரிமை பெற்றார். 1934 ல் சர் அலெக்சாண்டர் டாட்டன்காம் (Sir Alexander Tattonham) சமஸ்தான ஆட்சியாளராகப் பதவி ஏற்றார். அவரின் சீர்திருத்தங்கள் மிகவும் புகழ் பெற்றவை. வருவாய்த்துறை, நீர் பாசனம், நிதி, கூட்டுறவு ஆகிய பல துறைகளிலும் சிறந்த சீர்திருத்தங்களை செய்து புதுக்கோட்டையை நவீன சமஸ்தானமாவதற்கு வேண்டிய பல அடிப்படை காரியங்களைச் செய்தார். மன்னர் இராஜகோபால தொண்டைமான் ஆட்சியில் 1929 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரைக்கு இரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இதே ஆண்டில் புதிய அரண்மனையும் கட்டப்பெற்று 1930 ஆம் ஆண்டு மன்னர் குடியேறினார். 1948 ல் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது 26 வயது நிரம்பிய இளம் மன்னர் தன்னுடைய அரசை இந்திய அரசுடன் இணைத்தார். அன்று கஜானாவிலிருந்த மொத்தப பணத்தையும் (சுமார் 45 இலட்சம்) மற்றும் அரசாங்க சொத்து முழுவதையும் இந்திய அரசிடம் ஒப்படைத்தார். சுதேச மன்னர்களில் பெருமாபாலானோர் தத்தம் சமஸ்தானங்களை இந்திய யூனியனில் இணைக்க வல்லடி வழக்கிட்டு ஒத்து வராமல் இருந்த நிலையில் இராஜா இராஜகோபால தொண்டைமான் நடந்து கொண்டது பரம்மிக்கத்தக்கதாய் இருந்தது. முடிதுறந்த மன்னரான இராஜா இராஜகோபாலத்தொண்டைமான் இராஜரிஷியாக திருச்சியில் தமது அரண்மனையில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார். இந்த இராஜரிஷி வடமொழியில் வல்லவர். இவர் மெக்கானிசம், போட்டோகிராபி போன்ற தொழில்நுட்பங்களிலும், ஓவியம் போன்ற கலைகளிலும் வல்லவர். பழம்பெரும் கலைகளில் தமது கருத்தைச் செலுத்தி கவிதை ஆத்திக்கொண்டு தனது வாழ்க்கையை முடித்தவர். மீண்டும் 1974ல் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுகை அரண்மனையும் (தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) அரசுக்கு மக்கள் நலனுக்காக மிக குறைந்த தொகைக்கு அளித்தார் என்பதே புதுகையின் வரலாறு.

மஹாராஜாவின் மூத்த சகோதரி கமலாம்பாள் அம்மாணி ராஜாயி, கல்லாக்கோட்டை ஜமீன்தார் விஜய இரகுநாத ரங்கசாமி பாலசுப்ரமணிய சிங்கப்புலியார் அவர்களை மணந்து, புதுக்கோட்டையில் PLACE GATE என்னும் அரண்மனையில் வாழ்ந்தார்கள்.மஹாராஜாவின் இளவல் நடுமன்னர் இராதாகிருஷ்ண தொண்டைமான் அவர்கள் ராணி ரமாதேவி தொண்டைமான் அவர்களை 1954ம் ஆண்டு மணம் புரிந்தார்கள். அவர்கள் இருவரும் புது அரண்மனையில் (இன்றைய புதுகை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்) வசித்து வந்தார்கள். இருவருமே டென்னிஸ், கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊக்குவித்து வந்தார்கள். நடுமன்னர் இலங்கை சென்று கிரிக்கெட் மேட்ச் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ராணி ரமாதேவி தொண்டைமான் வீணை மற்றும் நாட்டியத்தில் சிறந்தவர். ஓரியண்டர் சமஸ்கிருத பள்ளியை இன்றளவும் நடத்தி வருகின்றார்கள்.

திருமண கோலத்தில்; ராதாகிருஷ்ணன் தொண்டைமான் மனைவி ராணியார் ரமாதேவி தொண்டைமான்

மஹாராஜா அவர்களின் இளைய சகோதரி மதுராம்பாள் அம்மணி ராஜாயி, சிவகங்கை மன்னர் ராஜாசாஹேப் கௌரி வல்லபஷன்முக ராஜாவை மணந்து. சிவகங்கை அரண்மனையில் வாழ்ந்தார்கள்.இளைய மன்னர் விஜய இரகுநாத தொண்டைமான் 3 முறை புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர். தன்னுடைய சகோதரியின் மகள் மீனாம்பாள் ராஜாயியை திருமண முடித்தார். இவர்களும் சிறந்த விளையாட்டு வீரர் ஆவார்கள். ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கெடுத்த பெருமையினை பெற்றவர். கொடைக்கானலில் உள்ள போட் கிளப்பின் தலைவராக மிகசிறந்த முறையில் பணியாற்றினார்கள். மிகுந்த பரோபகாரி.

நடுமன்னரின் புதல்வர்கள் மூத்த மகன் ஸ்ரீ பிரகதாம்பாள் தாஸ் ராஜ ராஜகோபால தொண்டைமான் பத்தாவது மன்னராக ஸ் வீகாரம் செய்யப்பெற்றவர். தற்போதைய மன்னர் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்.ஸ்கீட் என்னும் பிரிவில் தேசிய அளவில் பல பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள ஆவாரங்குடிபட்டியில் சர்வதேச தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளத்தை நிறுவி அதில் டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவர் மனைவி ஸ்ரீமதி சாருபால தொண்டைமான் மறைந்த பாஸ்கர தொண்டைமானின் பெயர்த்தி ஆவார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை திருச்சி மாநகராட்சி மேயராக 9 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் உள்ள மன்னர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளராகவும் விவசாயத்தின் மேல் உள்ள பற்றின் காரணமாக இயற்கை விவசாயத்தையும் ஆர்வத்தோடு செய்து வருகின்றார். ராஜ்குமார் தொண்டைமான் சிறந்த புகைப்பட நிபுணர். விதவிமான பறவைகளையும், இயற்கை காட்சிகளையும் படம்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். நடுமன்னர் அவர்களின் புதல்வி ராஜ்குமாரி ஜானகி மனோகரி இராஜாயி ஆவார். இவர் சிறந்த வாலிபால் விளையாட்டு வீராங்கனை மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்ற பெருமைக்குரியவர். இளைய மன்னரின் புதல்வர் இராஜ்குமார் கார்த்திக் தொண்டைமான் ஆவார். இவர் 2011-2012 ம் ஆண்டு புதுக்கோட்டை நகர மன்ற தலைவராகவும், 2012 முதல் 2016 ம் ஆண்டு வரை புதுக்கோட்டை அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான், ஸ்ரீ விஜயகுமார் தொண்டைமான் ஆகியோரின் அன்பு தாயார் ராணி ஸ்ரீ ரமாதேவி தொண்டைமான் அம்மையார் கடந்த அக்டோபர் 1ம் தேதி தனது 83வது பிறந்தநாளை கொண்டாயிருந்தார்கள். இருப்பினும் வயது முதிர்வு காரணமாக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராணியார் நேற்று (12.04.2023) இயற்கை எய்திவிட்டார் அவரின் இறுதி சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை – தஞ்சை சாலையில் இச்சடியில் உள்ள சிவார்பணம் அரண்மனையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜா மாதா மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் சார்பில் இன்று காலை 8 மணிக்கு சில்வர் ஹாலில் இருந்து வர்த்தகர்கள் ஒரு சேர பங்கேற்று ராஜமாதாவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அரசு சார்பில் ராஜமாதாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 38 = 41