பாதுகாப்புப்படை கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு: ஒன்றிய அரசு தகவல்

பாதுகாப்புப்படை நிரந்தர ஆணையத்திற்கு பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

 தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்புப்படை நிரந்தர ஆணையத்திற்கு தகுதியான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை கடந்த வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற செயல்களில் பாலின பாகுபாடு கூடாது என்றும் பெண்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அச்சமயம் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்புப்படையின் நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்புப்படை நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இந்த விளக்கத்தை வரவேற்பதாக நீதிபதி எஸ்.கே.கவுல்  தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், செப்டம்பர் 22ம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.