பழைய திருக்கோளக்குடியில் மக்கள் தொடர்பு முகாம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சிவகங்கை கலெக்டர்

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் தாலுகா பழைய திருக்கோளக்குடியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதனரெட்டி தலைமை வகித்தார். அனைத்துறை அலுவலர்கள் வந்திருந்தனர். ஊராட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். திருக்கோளக்குடி, அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கையில் மனுவுடன் காத்திருந்தனர்.சமூக பாதுகாப்புத்திட்ட துணைக்கலெக்டர் ஜீனு பொதுமக்களிடமிருந்து மனுக்களை வாங்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் கலெக்டரிடம் நேரில் கொடுக்க விரும்புவதாக சொல்ல மேடையில் கலெக்டரே எழுந்து நின்று எல்லாரிடமும் மனுக்களைப்பெற்று விசாரித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கைகள் எடுக்க ச்சொல்லி வழங்கினார். கலெக்டரிடம் மனுகொடுக்க நீண்ட கியூ காணப்பட்டது. போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி மேடைக்கு அனுப்பினர்.

அப்போது சத்திரப்பட்டியைச்சேர்ந்த  மாற்றுத்திறனாளி  இளைஞர் சிங்காரம் சக்கர நாற்காலியில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். அதைப்பார்த்த கலெக்டர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அவர் தந்த மனுவை வாங்கிப்படித்தார். அதில் சிறு தொழில் செய்ய கடனுதவி கேட்டிருந்தார். உடனே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், தொடக்க கூட்டுறவு வங்கி  செயலர் ஆகியோரை அழைத்து  மாற்றுத்திறனாளிக்கு தொழிற்கடன் ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

அதுபோல்  குழிபிறையில் இருந்து செவலூர்,திருக்கோளக்குடி, வேலங்குடி, கண்டவராயன்பட்டி வழியாக திருப்பத்தூருக்கு அரசு டவுன் பஸ் விட வேண்டும் என கிராம மக்கள் கோரினர்.  அதற்கு செவலூர் ரோடு சீரமைக்கும் பணி நடக்கிறது. அது முடிந்தவுடன் பஸ் விடப்படும் என்றார்.  இப்படி 50 க்கும் அதிகமான மனுக்களுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்தார் கலெக்டர் மதுசூதன ரெட்டி.  பின்னர் அவர் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 75 பேருக்கு வழங்கினார். இலவசமனைப்பட்டா,ஓஏபி, பட்டாமாறுதல், விதவைகள் உதவித்தொகை, ,இலவச வீடு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்றவை குறித்து 320 மனுக்கள் வந்தன.  இவை விசாரிக்கப்பட்டு அதன் விபரம் 30 நாட்களில்  மனுதாரர்களுக்கு  தெரிவிக்கப்படும்  என தாசில்தார்  வெங்கடேசன்  தெரிவிக்க முகாம் நிறைவடைந்தது.  மனிதாபிமானமிக்க கலெக்டரின்  செயல்பாடுகளை கிராம மக்கள் பாராட்டினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1