பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழக நிதியமைச்சர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறிய செய்தி மிகுந்த மனவருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் அகவிலைப்படி உயர்த்துவதும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அத்தியாவசிய தேவையுடன் கூடிய அடிப்படை உரிமை என்பதை தாங்கள் ஏற்றுக் கொண்டவர் என்று நாங்கள் அறிவோம். அந்த அடிப்படையில் தங்கள் தலைமையிலான ஆட்சியில் எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த நம்பிக்கையினை தகர்க்கும் வகையில் நிதியமைச்சரின் பேட்டி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பட்ஜெட் தாக்கலின்போது அரசின் வருவாயில் 19 சதவீதம் ஊதியத்திற்கும், 8 சதவீதம் ஓய்வூதியத்திற்கும் செலவாகிறது என்று நிதியமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தொலைக்காட்சி பேட்டியில் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு 65 சதவீதம் செலவாகிறது என்றும் இதேநிலை நீடித்தால் 10 ஆண்டுகளில், அரசின் வருவாயில் 100 சதவீதம் அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியத்திற்கு செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தங்கள் மூலமாக இழந்த உரிமையினை பெறலாம் என்று நம்பியிருந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இருக்காது என்று திடமாக நம்புகிறோம். கடந்த ஆண்டுகளில் தங்கள் வெளியிட்ட ஆதரவு கருத்துகள் அந்த நம்பிக்கையினை எங்களுக்கு தந்துள்ளது.
எங்களின் அன்பை பெற்றுள்ள தாங்கள் நிதியமைச்சரிடம் இதுகுறித்து பேசி தெளிவு ஏற்படுத்த வேண்டுகிறோம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வினை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். அதுபோல் பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும். மற்றபல கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.