பழனி அருகே, மஞ்சநாயக்கன்பட்டியில், காவல்துறையை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள, மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் செல்போன் டவரின் மீது ஏறி காளிபட்டியை சேர்ந்த சதாசிவம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காளிபட்டி செங்குளத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற திமுக துணை தலைவர் மோகனபிரபு, திமுக கவுன்சிலர் பொன்னுத்தாய் மகன் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மண் அள்ளுவதாகவும், கடந்த சனிக்கிழமை அன்று தனது மகன் கலைகௌதம் மற்றும் அவரது நண்பர்களுடன் சென்று போட்டோ எடுத்ததாகவும், அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர்களிடம் இருந்த செல்போன்களை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தனது மகன் கலைகௌதம், கவியரசு, மனோஜ், ஓடை ஈஸ்வரன், வனசேகர், கார்த்தி, ராஜேஷ் உள்ளிட்ட 8 பேர் மீதும், சத்திரப்பட்டி போலீசார் கொலை முயற்சி மற்றும் பிசிஆர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மண் அள்ளுபவர்களை விட்டுவிட்டு, தடுத்தவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி மற்றும் ஆயக்குடி போலீசார் சதாசிவத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்ததை அடுத்து சமரசம் ஏற்பட்டு செல்போன் டவரில் இருந்து சதாசிவம் கீழே இறங்கி வந்தார்.