திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கணக்கம்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தங்கம் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த நிலையில் பழனிச்சாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இரத்த காயங்களுடன் காணப்பட்ட பழனிச்சாமி உடனடியாக சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறை, குற்றவாளி சின்ன தங்கத்தை கைது செய்யாததை கண்டித்து, இறந்த பழனிச்சாமியின் உடலை கணக்கம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் அவரது உறவினர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மூன்று நபர்களுடன் மதுபோதையில் வந்த சின்ன தங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உறவினர்கள் சாலை மறியலில் இரண்டு மணிநேரமாக ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.