பழநி கோயிலுக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் இன்று துவக்கி வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவ.16) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.16) முகாம் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி, தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும்,” என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பழநி, தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும் பழநி, பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி,  பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலை சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் கோயிலின் நிதியிலிருந்து செலவிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 − 32 =