பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான சிவசங்கர் பாபா :300பக்க குற்றப்பத்திரிகை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா உட்பட 4 பேர் மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை  சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட 3 போக்சோ வழக்குகளில், சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் ஜூன் 18ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவசங்கர் பாபா ரகசிய அறைக்கு அழைத்து சென்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். மற்றொரு ஆசிரியரான பாரதி வெளிநாட்டில் இருப்பதால் சிபிசிஐடி தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் 59வது நாளிலேயே சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ள முதல் போக்சோ வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

குறிப்பாக 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். சிவசங்கர் பாபா, ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 4 பேர்  மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

சிபிசிஐடி அளித்துள்ள இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த முடிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 − 64 =