பள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு ஆசிரியர் மனசை வெல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தியப் பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் யாரும் செய்திடாத புதிய முயற்சியாக ஆசிரியர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சி என்னும் அடிப்படை சாராம்சத்துடன் ஆசிரியர் மனசு என்னும் புதிய திட்டத்தை உருவாக்கி தானே நேரடியாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று கல்வித்துறையில் அடுத்தடுத்து அதிரடி காட்டுகிறார் தமிழகப் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

ஆசிரியர் மனசு திட்டத்தை தொடங்கியது முதல் மின்னஞ்சல்கள் மற்றும் ஆசிரியர் மனசிப்பெட்டி வழியே வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து தேவையான கோரிக்கைகள் மீது, அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பிக்கின்றார் அமைச்சர். ஆசிரியர்களின் தினசரிப் பாடத்திட்டம் எழுதும் முறையை மாற்றி, வாரம் ஒருமுறை மட்டும் பாடக்குறிப்பு எழுதினால் போதும்   என்று உத்தரவு பிறப்பித்து ஆசிரியர்களது மனக்குறையைப் போக்கினார்.

அடுத்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ்த் திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டிற்கான இந்தத் தேர்வானது முதல் பருவத்தேர்வு முடிந்த அடுத்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருந்தது. மாணவர்கள் ஒரு தேர்வு முடிந்து அடுத்த தேர்விற்கு கொஞ்ச நாட்கள் இடைவெளி விட வேண்டும் என்று கோரிக்கைகள் ஆசிரியர்களிடமிருந்து  வந்த வண்ணம் இருந்தன. உடனடியாக அதனைப்  பரிசீலனை செய்து தமிழ்த் திறனாய்வு தேர்வை 15.10.2022 அன்று நடத்த உத்தரவிட்டார்.

மேலும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது கடந்த ஆட்சியில்  நிறுத்தப்பட்டிருந்தது.  பல ஆண்டுகளாக   கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படாமல் இருக்கும் எங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கல்வித் துறையில் பணியாற்றும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகள் சார்பில்  கோரிக்கைகள் ஆசிரியர் மனசுப் பிரிவிற்கு வந்தது . இதுபற்றி அறிந்த அமைச்சர்  கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020-2021, 2021-2022) விடுபட்ட வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிட்டு, வரும் 21.09.2022 அன்று காலை 8.00 மணிக்கு சென்னை சாந்தோம் ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி அமைச்சர் அவர்களால் தகுதியானவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செயல்படுவது அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஆசிரியர் மனசு பிரிவிற்கு வரும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிப்பதால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் எழுந்து, ஆசிரியர்கள் மனசை வென்ற அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்பட்டு வருகின்றார் எனக் கல்வியாளர்கள் வரவேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 − 14 =