பள்ளிகளில் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் கொத்தடிமை முறை கைவிடப்பட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வரும் 11ம் தேதி அன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் இப்போராட்டத்தை தமிழகஅரசு தவிர்க்கும் வகையில் கீழ் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆசிரியர்-அரசு ஊழியர் சங்க அமைப்புகளை அழைத்து தமிழக முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழக அரசுக்கு அவசர வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும். மத்திய அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வுகளை போல அதே நாளில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்திட வேண்டும். பள்ளிகளில் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் கொத்தடிமை முறை கைவிடப்பட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பணியில் சாதாரண நிலை ஆசிரியர்களின் ஊதிய கோரிக்கைகளை நிறைவேற்றி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நிபந்தனையில் பணியாற்றி வரும் நிரந்தர பணியிடத்து ஆசிரியர்களுக்கு அவர்களது பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து அவர்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.
அன்று பேரறிஞர் அண்ணா பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கிய உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். விடுப்பு ஊதிய உரிமையைப் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குப் பொது இட மாறுதலுக்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழ்நாடு ஆசிரியர் அரசு ஊழியர்களின் நியாயமான மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.