கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் சுதர்சன் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் வயது 22. பி.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ் இறுதியாண்டு மாணவரான பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர், பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை முடித்து காரைக்குடிக்கு வருகை புரிந்தார்.

அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் சாலையோரங்களில் இயங்கிவரும் தற்காலிக கடைகளுக்கு நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மூலமாக வசூலிக்கப்படும் வரி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கும் மாடுகளுக்கும் கழுத்தில் ரேடியப்பட்டை அல்லது பிரதிபலிப்பான் கழுத்துப்பட்டை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்படுத்தப்பட்ட தரமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தனிநபராக மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் தனது மிதிவண்டி மூலமாக சுற்றி வந்து அதன் பிறகு ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து நாடு முழுவதிலும் உள்ள 718 மாவட்டங்களையும் மிதிவண்டி பயணத்தின் மூலமாக சுற்றி வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய மிதிவண்டி பயணத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் செல்லும் வழிகளில் ஆங்காங்கே டெண்ட் அமைத்து தங்கி கொள்வதாக தெரிவித்தார்.