பரம்பூர் பகுதியில் வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர்

பரம்பூர் பகுதியில் வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை மற்றும் பரம்பூர் ஆரம்ப சுகாதார பணியாளர்களை அப்பகுதி  பொதுமக்கள் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்ட இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு முகாம் அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கு.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கு.கலையரசன் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

அதன்பிறகு பரம்பூரை சுற்றியுள்ள பொது இடங்களில் இருந்த பொதுமக்களிடமும், கரையன்குளம் வயல்வெளியில் நூறு நாள் வேலைபார்க்கும் பெண்களிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி சித்தமருத்துவர் சுயமரியாதை விளக்கி கூறினார். செவியியர் சுபஸ்ரீ கை கழுவும் முறை குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார். மருத்துவப் பணியாளர்கள் சிவசாமி, காயத்ரி ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், கபசுரக் குடிநீர் வழங்கினர்.

இவ்வாறு பரம்பூரை சுற்றியுள்ள பொது இடங்கள் மற்றும் வயல்வெளிகளில் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை மற்றும் பரம்பூர் ஆரம்ப சுகாதார மருத்துவப் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினர்.