குடியரசு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. அதே வேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது. இதனையடுத்து 13 கிராம மக்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சென்னையில், தமிழக அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை அரசிடம் கூறியுள்ளதாகவும், தங்களது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை (ஜன.26) ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக நான்காவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்: “மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வேளாண்மைத் தொழிலையும், விவசாயிகளையும், குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் குறிப்பாக நமது ஏகனாபுரம் கிராமத்தை முழுமையாக அழித்து நிறைவேற்றப்படவுள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்தை எந்தவொரு வடிவத்திலும் ஏற்றுக்கொள்வது இல்லை என்பதோடு மாநில அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும்,
அதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட வேண்டும் எனவும் இந்த கிராம சபைக் கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என முழுமையாக கைவிட வேண்டும் என்று இந்த கிராம சபையில் 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” . ஏற்கெனவே சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி தினமென ஏற்கெனவே 3 முறை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.