பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டம் வாபஸ்: சென்னை ஐகோர்ட்!!!

புதிய வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம் என்று பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன்  குடும்பத்திற்கு 14  லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ளடக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து , பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு மெமோ ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்று உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதி, செப்டம்பர் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான கட்டாய வாகன காப்பீடு உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு வழங்குவது சாத்தியமில்லை என்று காப்பீட்டு நிறுவனங்கள் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பம்பர் டூ பம்பர் அடிப்படையில் காப்பீடு செய்வது கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மேலும், போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்றும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதி கருத்து கூறினார்.