பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். பட்ஜெட் தொடர்பாக பல்வேறு துறையினரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அப்போது, அவரிடம் பட்ஜெட் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வோம். மேலும், பருப்பு வகைகளை விதைக்க விவசாயிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அப்போது தான் வரும் விதைப்பு பருவத்தில் இந்தியாவில் பருப்பு உற்பத்தி அதிகரிக்கும்’ என்றார்.