தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், சங்கீதா தம்பதியின் 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கும் நலன்ராஜன் உலக சாதனைக்காகவும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காகவும் சாலையில் 1 மணி நேரத்தில் 18.4 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தார்.
மாணவர் நலன்ராஜன் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு புறவழி சாலையிலிருந்து தனது ஸ்கேட்டிங்கை துவக்கினார். முதலில் மாணவர் நலன்ராஜனை மருத்துவர் சதாசிவம் பரிசோதித்தார். பின்னர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் ஸ்கேட்டிங்கை கொடியசைத்து துவக்கி வைத்தார். அணைக்காடு புறவழி சாலையிலிருந்து ஸ்கேட்டிங் செய்யத் துவங்கிய மாணவர் நலன்ராஜன் புறவழி சாலை முழுவதும் சென்று மீண்டும் அதே சாலை வழியாக திரும்பி வளவன்புரம் புறவழி சாலையில் நிறைவு செய்தார். இது 18.4 கி.மீ தூரம் ஆகும். இதன் மூலம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பிடித்து அபார சாதனை படைத்தார்.
மேலும் சாதனை புரிந்த மாணவர் நலன்ராஜனை வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பளித்ததோடு மட்டுமல்லாமல், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.
பின்ளர் நடந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் இந்தியன் புக் மற்றும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக்நாயர் மாணவர் நலன்ராஜனுக்கு சான்றிதழையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியை சாய்நிகில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.