பஞ்சு மீதான 1% வரி நீக்கம் : தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ராஜ்குமார்

பஞ்சு மீதான 1% வரி நீக்கத்தால் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நாட்டில் உள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 110 முதல் 120 லட்சம் பேல் பருத்தி பஞ்சு தேவையில், சுமார் 5 முதல் 6 லட்சம் பருத்திப் பஞ்சு பேல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் சுமார் 95% பஞ்சை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2 முதல் 6 வரை வாடகை செலுத்தி வாங்குவதால் தமிழர்களின் போட்டி திறன் குறைந்து வருகிறது.

மேலும் இதர மாநிலங்கள் பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்குவதால் பருத்தி விவசாயம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுமையாகவே இருந்து வந்தது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த வரியை நீக்கக் கோரி தமிழக விவசாயிகளும் ஜவுளித் துறையினரும் கோரிக்கையை வைத்து வந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இந்த நீண்ட கால கோரிக்கையை ஏற்று சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் நிலவிவரும் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத வரி நீக்கத்தை அறிவித்து நடப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றியை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கொள்கை முடிவாகும் என பாராட்டியதோடு ஒரு சதவீத வரி நீக்கம் தமிழகத்தில் உள்ள சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு உடனடி பயன் ஏற்படுவதுடன் தமிழக பருத்தி உற்பத்தியை 5 லட்சம் பேல் இருந்து 25 லட்சம் பேல் 2030ம் ஆண்டிற்குள் உயர்திட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்த இருக்கும் சூழ்நிலையில் சுமார் 10 லட்சம் பருத்தி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் இதனால் மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி பல மடங்காக உயரும் என்றும் தெரிவித்தார்.