பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் தமிழக வீரர் கமலேஷ் வீரமரணம்: சோகத்தில் சேலம் பனங்காடு கிராம மக்கள்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சேலம் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று (ஏப்.12) அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப் பிரிவை சேர்ந்த கமலேஷ் (24), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் நகரல் (25) மற்றும் சாகர் பன்னே (25) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரது தந்தை ரவி நெசவுத் தொழிலாளி, தாய் செல்வமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 வது மகனான கமலேஷ், சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், தொடர் முயற்சியால் ராணுவத்தில் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்து சென்ற கமலேஷ், நேற்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த செய்தி அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் மசக்காளியூர் பனங்காடு கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனிடையே, வீரர் உயிரிழந்த செய்தி அறிந்த கிராம மக்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர். வீரர் கமலேஷின் உடல் இன்று மாலை அல்லது நாளை காலை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர் கமலேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =