பக்தர்களின் கவனத்துக்கு… திருப்பதியில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதியில் வரும் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குரார்பனமும் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழாவும் தொடங்குகின்றன.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளன.

இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வருகிற 24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.