நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு வைத்துள்ளோம். அதுவரை நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா குறைந்த மாவட்டங்களிலும் பொது மக்கள் முக கவசம் அணிந்து செல்வது மிகவும் நல்லது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமும், தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழக மக்களிடம் 66 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.
விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வேயில் அங்கு நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட 10 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கும் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதை கண்டறிய சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா பரவுவது கட்டுக்குள்தான் உள்ளது. 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2,87,87,950 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 2,68,30,662 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 19,57,288 பேர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 12,26,511 தடுப்பூசிகள் கைவசம் உள்ளது. மேலும் தொடர்ந்து தடுப்பூசிகள் வந்து கொண்டு இருப்பதால் பல மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.