
நெல்லை அருகே உள்ள மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று மாலையில் சவாரிக்காக நெல்லைக்கு வந்து விட்டு, மீண்டும் அவர் மட்டும் ஊருக்கு திரும்பிச் சென்றார். நெல்லை அருகே கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் சென்றபோது, திடீரென 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபகுமார் உள்ளிட்டோரும் அங்கு வந்து விசாரித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட விஜயகுமார் மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லை. மேலும் அவரது ஊரில் யாரிடமும் வாக்குவாதம் கூட செய்தது இல்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த கிராமத்தில் இரு தரப்பினர் இடையே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்படும். அந்த கோபத்தில் யாரேனும் இந்த கொலையை செய்தார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக விஜயகுமார் கரிசல்பட்டி கிராமம் வழியாக ஒரு தோட்டத்திற்கு வேலைக்கு தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று இறக்கிவிட்டு மீண்டும் அதே வழியில் வீடு திரும்பி உள்ளார். இதனை நோட்டமிட்டு தான் மர்ம நபர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். காட்டுப்பகுதி என்பதால் சி.சி.டி.வி. கேமராக்களும் அப்பகுதியில் இல்லை. இதனால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், இன்னோஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ சங்கர், செல்வகுமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே விஜயகுமாரை கொலை செய்த கும்பலை கைது செய்யும்வரை அவரது உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.