நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற அறிவிப்பு ரத்து: சென்னை ஐகோர்ட்!!

நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

காஞ்சிபுரம் சாலையில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவர் 90% ஊனம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். இவருக்கான இழப்பீட்டு தொகையாக 18,43, 908 ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த பெண்ணுக்கு 1,49,80,548 ரூபாயாக இழப்பீடை உயர்த்தி வழங்க வேண்டும் என்று 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் வாகனங்களை இயக்கலாம் என்று மத்திய அரசு 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.   

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலை மேம்பாட்டையும் இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தான் வேகம் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2018ம் ஆண்டு மத்திய அரசு வேகத்தை அதிகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம் 2014ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60- 100 கிமீ இடைவெளியில் வேகத்தை நிர்ணயத்து, அது சம்மந்தமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.