நீலகிரியில் இரு ஆண் புலிகள் பலி 20 பேர் கொண்ட குழு விசாரணை – ஒரே மாதத்தில் 6 புலிகள் இறந்ததால் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு புலிகளின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மோப்ப நாய் உதவியுடன் 20 பேர் கொண்ட சிறப்புக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்டது எமரால்டு கிராமம். எமரால்டு அருகிலுள்ள, நேரு நகர் பாலத்தில் இருந்து அவிலாஞ்சி டேம், தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் ஆற்றில் மர்மமான முறையில் நேற்று மாலை இரு புலிகள் இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். எனவே, இது குறித்து காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த நீலகிரி வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்த புலிகளின் உடல்களை ஆய்வு செய்தனர். ஒரு புலி நீரோடையிலும், மற்றொரு புலி நீரோடையின் கரையிலும் உயிரிழந்து கிடந்தன. இந்நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டிதலின்படி இரண்டு புலிகளின் உடற்கூறு ஆய்வு இன்று நடத்தப்பட்டது. மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும் போது, ‘எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் இறந்தது தொடர்பாக நடத்தப்பெற்ற பிரேத பரிசோதனையின் இடைக்கால அறிக்கை: இறந்து கிடந்ததில் ஒன்று சுமார் 8 வயதுடைய ஆண் புலி. இந்த புலிக்கு வெளிப்புற காயங்கள் இல்லை. அனைத்து உடல் பாகங்களும், கோரை பற்கள் மற்றும் நகங்கள் உட்பட அப்படியே இருக்கின்றன. வயிற்றில் திரவத்துடன் கூடிய முடி உள்ளது.

இரண்டாவது ஆண் புலிக்கு சுமார் 3 வயதிருக்கும். உடற்கூராய்வில் இந்த புலிக்கு முதுகெலும்பு நெடுவரிசையின் எலும்பு முறிவுடன் முதுகு மற்றும் கழுத்தில் வெளிப்புற காயங்கள் காணப்பட்டன. காயங்கள் மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இருக்கலாம். அனைத்து உடல் பாகங்களும் முழுமையாக இருந்தன. வயிற்றில் முள்ளம்பன்றி முட்கள், முடி மற்றும் இரை இனத்தின் இறைச்சி ஆகியவை இருந்தன. தடயவியல் மற்றும் நச்சுயியல் பகுப்பாய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், புலிகள் இறந்த இடத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான கால்நடை ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுக்காக அந்த கால்நடையின் உடலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.உதவி வனப்பாதுகாவலர் தேவராஜ் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்புக் குழு, மோப்ப நாயுடன் அப்பகுதியில் விசாரணை நடந்தி வருகிறது. இக்குழுவினர் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்’ என்றார். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளனவா என கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகள் தொடர் இறப்பால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனச் சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரமே ஆன 2 புலிக்குட்டிகள் உயிரிழந்தன. மேலும் முதுமலை வனப்பகுதியில் மற்றொரு இடத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. இதேபோல் நடுவட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்தது. இந்நிலையில், தற்போது அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து உள்ளன. ஒரே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் 6 புலிகள் இறந்து இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது’ என்றனர்.