நீட் தேர்வு முடிவுகள் 4 மாணவர்கள் முதலிடம் தமிழக தேர்ச்சி விகிதம் 51.3%

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நேற்று (செப். 7) காலையே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் நேற்றிரவு வெளியானது. இந்தத் தேர்வில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in/ ntaresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 4.47 லட்சம் பேர் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். 1.31 லட்சம் பேர் பட்டியலினத்தையும், 47,295 பேர் பழங்குடியின வகுப்பையும் 84,070 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர் பிரிவையும், 2.82 லட்சம் பேர் பொதுப் பிரிவையும் சேர்ந்தவர்களாவர்.

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.இவர்களில் மொத்தம் 51.3% பேர் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு. கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். அதேபோல் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 50 இடங்களில் அதிகபட்சமாக கர்நாடகாவில் இருந்து 9 பேர் இடம்பெற்றுள்ளனர். அடுத்தபடியாக டெல்லி, தெலங்கானாவில் தலா 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இத் தேர்வில் நாடு முழுவதும் 4 பேர் 99% பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் தனிஷிகா, (ராஜஸ்தானில் தேர்வெழுதிய தனிஷிகாவின் சொந்த ஊர் ஹரியாணா) டெல்லியின் வட்ஸ் ஆசிஷ் பத்ரா, ஹ்ரிஷிகேஷின் என்.கங்குலி மற்றும் ருச்சா பவாஷேஎ 720க்கு 715 மதிப்பெண் பெற்று 99.99% உடன் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாததால் முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும்இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவது தள்ளிப்போனது. தமிழகத்தில் நடத்தப்படவிருந்த இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும் தள்ளிவைக்கப்பட்டது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், நேற்று (செப். 7-ம் தேதி) இரவில் வெளியானது. நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் கடந்த ஆக. 31-ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 − 18 =