நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமசோதா: +2 மதிப்பெண் அடிப்படையில் இனி மாணவர் சேர்க்கை!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று,முதல்வர் மு.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமசோதாவவை தாக்கல் செய்தார் .

அதில் கூறியாதவது., நீட் என்னும் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாகத் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  விலைமதிக்க முடியாத மாணவ, மாணவியர் தங்களது இன்னுயிரை இந்தப் போராட்டத்துக்கு தாரைவார்த்து மறைந்து போயிருக்கிறார்கள்.  தொடக்கத்தில் இருந்தே இந்த நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. ஏனென்றால் மாணவர்களுக்குக் கல்வித் தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுகஅரசு.

இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை இரத்து செய்ய, திமுக அரசு அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம்.  அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான  சட்டமுன்வடிவினை இப்பேரவையில் நான் முன்மொழிகிறேன். 

ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. இராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.  அரசாணை எண் 283, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-6-2021 அன்று இந்தக் குழு அமைக்கப்பட்டது.  இந்தக் குழுவிலே  பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தார்கள்.

இந்த  உயர்மட்டக் குழுவின்  ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன. பொது மக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை இக்குழு கேட்டுப் பெற்றது.  இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு  14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது. 

அந்தப் பரிந்துரைகளில் குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்த நிறுவனங்களிடமிருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலைப் பள்ளிப் பாடத் திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதித் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாது.

மேலும்,  மருத்துவக் கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம்.  எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்த தகுதியுடையது.  இந்தப் புதிய சட்டமுன்வடிவில், மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.

இந்த நீட் தேர்வால் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனிதா தொடங்கி, ஏராளமான மாணவர்கள் தங்களுடைய உயிரை இழக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  நேற்றைக்குக்கூட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தனுஷ் என்ற மாணவர் இந்த நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார்.  உயிர்க்கொல்லியாக மாறி வரும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். 

இந்த அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இன்றைக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெற்று  வரலாற்றுச் சாதனையை நாம் புரிந்திருக்கிறோம். இந்த நீட் தேர்வு விவகாரத்திலும் அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பினை நல்கி,  சமூகநீதியில் வரலாறு படைத்திட துணைநிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்,’என்றார்.