நீச்சல் போட்டியில் சாதனை நடிகர் மாதவன் மகனை வாழ்த்திய விஜயகாந்த்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து ‘மின்னலே’, ‘டும் டும் டும்’, போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். வேதாந்த் சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் தன் மகன் வேதாந்த் செய்யும் சாதனைகளை தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார் சமீபத்தில் வேதாந்த் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக மாதவன் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேதாந்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜயகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் , 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.