கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பக்க விளைவுகளால் ஏற்படும் முதல் மரணத்தை நியூசிலாந்து உறுதி செய்து உள்ளது.
அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசிக்கு, நியூசிலாந்து அரசு தற்காலிகமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து அந்நாட்டில் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் ஒருவர் ‘மியோகார்டிடிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய இதய தசை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தடுப்பூசியின் பக்க விளைவுகளால் ஏற்படும் முதல் மரணம் இதுவென நியூசிலாந்து உறுதி செய்து உள்ளது.
எனினும், கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை விட அதிகமாக இருப்பதாக நியூசிலாந்து அரசு கூறியுள்ளது. ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்க விளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.