நாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3 விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், நாளை விண்ணை நோக்கி பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலனை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்வுடன் இணைத்துள்ளது. தற்போது ஜிஎல்எல்வி மார்க்-3 எல்எம்வி3 என அழைக்கப்படுகிறது. சந்திரயான் 3 விண்கலத்தை எல்எம்வி3 ராக்கெட்டில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பொருத்தினர். விண்கலத்துக்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டது. மேலும் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நாளை மதியம் 2.35 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட்டவுன் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், ‘சந்திரயான்-3 திட்டம் நிலவின் தென் துருவ ஆய்வை நோக்கமாக கொண்டுள்ளது. ராக்கெட்டின் மேல் உள்ள பேலோட் ஃபேரிங் லேண்டர், ரோவர் ப்ராபல்ஷன் மாட்யூலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்கலம் லேண்டர், ரோவரை சுமந்து சென்று நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் என்றார்.