நாளை கோவையில் அரசு சார்பில் ஒரே நேரத்தில் 1.50லட்சம் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்வு

கோவை மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது . 1,474 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பினரும் பெறும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , மருத்துவமனைகள் , அங்கன்வாடி மையங்கள் , சத்துணவு மையங்கள் , தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள் , மலைப் பகுதிகள் , போக்குவரத்து வசதியற்ற பகுதிகள் , கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1,166 முகாம்களும் , மாநகராட்சி பகுதிகளில் முகாம்களும் மொத்தம் 1,474 இடங்களில் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் செயல்பட உள்ளன.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,முகாம் நடைபெற கூடிய இடங்களை கொரோனா தடுப்பூசி கண்காணிப்பாளர் சங்கர், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆணையளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு அலுவலர் சங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.