நாமக்கல் : மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில், தோட்டதக்காரத் தெருவில் தங்கப்பாண்டியன் என்பவருடைய மகன், மகள் இருவரும் தசைநார் சிதைவு நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாய முன்னேற்றக் கழகத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் நிறுவனத் தலைவர் செல்ல இராசாமணி ஆலோசனைக்கு இணங்க, கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், தலைமை நிலைய செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் மோகனூர்  பத்து என்கிற பத்மநாபன் ஆகியோர் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று சுமார் 10,000 ரூபாய்  மதிப்புள்ள மளிகைப் பொருட்களை நேரில் வழங்கினர்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் தந்தையிடம் விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் குறைகளைக் கேட்டு அறிந்தார். அப்போது தனது மகனும், மகளும் தசை நார் சிதைவு நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களை பராமரிப்பது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது எனவும், எந்த ஒரு பணிகளுக்கும் எங்களால் செல்ல முடியாமல் அவர்களுடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லாமல் இரு குழந்தைகளையும், பராமரிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், அதோடு வாடகை வீட்டில் குடியிருப்பதால் வாடகை கூட செலுத்த இயலாத சூழ்நிலை உள்ளது எனவும் தெரிவித்தார்.

இவரிடம் குறைகளைக் கேட்டறிந்த பின்னர், விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி தமிழக அரசின் சார்பாக உடனடியாக அவர்களுக்கு வசிப்பதற்கு வீடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யவும், குழந்தைகளை பராமரிப்பதற்கு மாதந்தோறும் நிவாரணத் தொகை வழங்கிட தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும்  கடிதம் அனுப்பப்படும் என்றும்  உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர், சகோதரியின் தந்தை தங்கபாண்டியன் புதுகை வரலாறு செய்தியாளரிடம் கூறியதாவது:- எனது மகன் பரதன்(28) பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதும், அதே போல் என் மகள் தீபா(26) பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதும் இந்த நோய் ஏற்பட்டது. இந்த நோய் பற்றி தெரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டோம். தசைநார் சிதைவு நோய் 26 வகைகளை கொண்டது என கூறுகிறார்கள்.

எங்களுடை வசதியின்மை மற்றும் இயலாமை குறித்தும் மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் கோரி பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும், நேரில் சென்று மனு கொடுத்தும் இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை என கண்ணீருக்கிடையே கூறினார். ஏழைகள் துயர்துடைக்கும் அரசு தங்களையும் காக்க வேண்டும் என தழிழக அரசை கேட்டுக்கொண்டார்.

மேலும் இவர்களுக்கு உதவ விரும்பும் நல் உள்ளங்கள் மற்றும்  தன்னார்வலர்கள் மு.தங்கபாண்டியன், த/பெ.முருகேசன், 18/21 தோட்டக்காரத்தெரு, மோகனூர், நாமக்கல் – 637015 என்ற முகவரியிலோ அல்லது 9487940626 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு உதவலாம் என விவசாய முன்னேற்ற கழகம் சார்பிலும், புதுகை வரலாறு சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.