நாமக்கல்லில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

நாமக்கல் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் மூலம் நாமக்கல்லில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகளை தற்போதைய அரசு தர கட்டுப்பாடு செய்ய வேண்டும் என நாமக்கல் நகர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் கொரோனா ஊரடங்கிலும் 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறுமா என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் 37 ஏக்கர் பரப்பளவில், ரூ.338.76 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க கடந்த ஆண்டு தமிழக அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி நிர்வாக கட்டிடம், வகுப்பறைக் கட்டிடம் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் 5,58,281 ச.அடி பரப்பில் ரூ.181.545 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதற்கான டெண்டர்விடப்பட்டு, நாமக்கல்லை சேர்ந்த பிஎஸ்டி கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியினர் ஒப்பந்தம் பெற்று பணியினைச் செய்து வருகின்றனர். இதற்கு அருகில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் மற்றொரு கான்ட்ராக்டருக்கு வழங்கப்பட்டு அதன் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கல்லூரி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இந்த 2021-22ம் கல்வியாண்டில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கையை துவக்க வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. இதை நிறைவேற்றும் வகையில் மருத்துவக்கல்லூரி கட்டிடம், நிர்வாகக் கட்டிடம், டீன் அலுவலகம், ஆடிட்டோரியம், கேண்டீன், உயர் மின் அழுத்த அறை, மாணவர்கள், மாணவிகள் ஹாஸ்டல், டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள், முதல்வர் குடியிருப்பு, உள்ளிருப்பு டாக்டர்கள் ஆண், பெண் குடியிருப்புகள் ஆகிய கட்டிடங்கள் வேலை துவக்கப்பட்டு 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்து 13 மாதங்கள் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், வெளிமாநில பணியாளர்களை தனி பேருந்துகளில் அழைத்து வந்து, வளாகத்திலேயே தங்க வைத்து, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கட்டுமானப் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் லைப்ரரி போன்றவைகளும் கட்டி முடிக்கப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வருகின்ற செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் 150 மாணவ மாணவியர், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அட்மிஷன் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை அங்கீகாரத்திற்காக, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கடந்த 5ம் தேதி சென்னை மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலக அதிகாரிகள், நாமக்கல் வந்து கல்லூரி கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர். கல்லூரி வளாகத்தைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர், நுழைவு வாயில், தீத்தடுப்பு அமைப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு 13 மாதங்களில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு, கல்லூரி மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் முதலாண்டு சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் எடுத்து வருகின்றனர் என்று பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனர் தென்னரசு தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்கண்ட பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் சென்னை ராமாபுரத்தில் கட்டிய குடிசைமாற்று வாரிய வீடுகள் தரமில்லை என அரசு தரப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கட்டிடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசு, சேகர்பாபு ஆய்வு செய்துள்ளனர். மேலும் கீழ்பவானி ஆற்றின் குறுக்கே ஈரோடு நசியனூர் அருகே இதே நிறுவனம் கட்டிய தடுப்பணையும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். பிஎஸ்டி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த கட்டிடங்களை தர ஆய்வு செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே மேற்படி நாமக்கல் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக, வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லூரியின் புதிய கட்டுமான பணிகளையும் தர ஆய்வு செய்து அதன்பின் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டால் சிறப்புடையதாக இருக்கும் என நாமக்கல் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். இக்கல்லூரி கட்ட தொடங்கிய சில மாதங்களிலேயே புதிய கட்டிடத்தின் சில பகுதிகள் உயிர் சேதமின்றி இடிந்து விழுந்தது. அப்போதைய அதிமுக மின்சார துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் அதை பார்வையிட்டனர். அப்போதே இந்த சம்பவத்திற்கு திமுக போன்ற எதிர் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்ததுடன், கட்டிடத்தை தர ஆய்வு செய்த பின் கட்டிட பணியை தொடர வேண்டும் என வலியுறுத்தி கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.