“நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு புதன்கிழமை எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில். திருச்சி சிவா இன்று டெல்லியில் இருந்து திருச்சி வந்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடந்தவற்றை நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மன நிலையில் இல்லை. கடந்த காலத்திலும் சோதனைகளை சந்தித்து உள்ளேன். அடிப்படையில் நான் முழுமையான, அழுத்தமான கட்சிக்காரன்.
என்னை விட எனக்கு கட்சிதான் முக்கியம் என்ற காரணத்தால் பலவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. யாரிடமும் புகார் கூறவில்லை. தனி மனிதனைவிட இயக்கம் பெரியது என்ற தத்துவத்தில் வளர்ந்தவன் நான். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையை தந்துள்ளது. வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மனநிலையில் இல்லை.
நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால். நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன். நான் விரைவில் உங்களிடம் பேசுகிறேன். எல்லாவற்றையும் கூறுகிறேன். விரைவில் கூறுகிறேன்” என்று அவர் கூறினார்.